What are your looking for ?
கோவை பிச்சனூரில் உள்ள ஜெ. சி. டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 26.7.2024 அன்று காலை 10:30 மணி அளவில் 25 ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தின விழா (கார்கில் விஜய் திவஸ்) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய இவ்விழாவில்,ஜெ.சி. டி .கல்லூரி பேராசிரியை திருமதி. ஆ .நாகவேணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர். முனைவர். சு. மனோகரன் அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். கார்கில் போரில் பங்கு பெற்று இந்தியா வெற்றி பெற குஜராத் பிரிவில் அரும் பங்காற்றிய பொறியாளர் . திரு.ஜி.இ ரவீந்திரன் (இந்திய விமானப்படை-ஜூனியர் வாரண்ட் ஆபீஸர்) அவர்கள் தமது பொன்னான நினைவுகளை இளம் தலைமுறையினரிடம் உணர்வு பொங்க பகிர்ந்து கொண்டார்.
மேலும் இந்திய விமானப் படையின் சர்ஜன்ட் ஆக 1993 முதல் 2013 வரை சேவை புரிந்த திரு. ஆர். கார்த்திகேயன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர்தம் தேசப்பற்று மிக்க உரையில், கார்கில் போராட்ட நிகழ்வுகளையும் ,நம் இராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தையும் நினைவு கூர்ந்தார். பரம்வீர் சக்ரா விருதின் சிறப்புகளையும் ,இராணுவ சேவையின் உயர்வையும் இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைத்தார்.மேலும் தேசப்பற்றையும், தேச ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் கார்கில் போர் குறித்த காணொளி காட்சியும் இந்நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது. ஆங்கிலத் துறை பேராசிரியை திருமதி. நான்சி நிஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவேறியது.